இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் P.T.உஷா. இந்தியாவின் தங்க மங்கை, தடகள நாயகி, ஆசிய தடகள ராணி, தடகள அரசி உள்ளிட்ட பெயர்களுக்கு சொந்தக்காரர். விளையாட்டுத் துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் அவர். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த உஷா சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி அளவிலான பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளார்.
1976ஆம் ஆண்டு கேரள அரசு பெண்களுக்கென கண்ணூரில் தொடங்கிய விளையாட்டு பள்ளியில் சேர்ந்தார். இந்நிலையில் 1979 ஆம் ஆண்டு தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். இதனையடுத்து 1980ல் பங்கெடுத்த முதல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாய்ப்பை இழந்தாலும் தன் விடா முயற்சியை மட்டும் விடவில்லை. பின்னர் தேசிய, ஆசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட பல பதக்கங்களை குவித்தார்.
மேலும் தடகள போட்டியால் இந்தியாவில் ஜொலித்துக் கொண்டிருந்த உஷாவுக்கு அப்போது ஏற்பட்ட சிக்கல்கள் அதிலிருந்து அவர் நீண்ட விதம் பற்றி உஷா ஒரு பேட்டியில் கூறும்போது, “1988ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வாய்ப்பை இழந்தேன். மேலும் அந்த காலக்கட்டத்தில் மீள முடியாத வலியுடன் ஒரு விபத்தை எதிர்கொண்டேன். என் வாழ்நாளில் நான் எதிர்கொண்ட வலியும் வேதனையுமான காலகட்டம் அது” என கூறினார். இனி உஷா விளையாட்டுத் துறையில் ஜொலிக்க மாட்டார், அவரால் உத்வேகத்தோடு விளையாட முடியாது என்றெல்லாம் விமர்சனங்கள் வீசப்பட்டன.
அத்தகைய பேச்சுக்கள்தான் தான் என் உடல் வலியை விட அதிக வேதனையை கொடுத்தது. மேலும் தோல்வி, வலி, புறக்கணிப்பும் இன்றி சாதனை என்பது சாத்தியமே இல்லை. அதை நன்கு உணர்ந்தேன் அப்போது என் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. உடனே நீ உன் கனவை வசப்படுத்து, உன் திறமையை வெளிப்படுத்து என்று என் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த ஊக்கம் விவரிக்க முடியாத வார்த்தைகள். மேலும் ஒரு மனநல ஆலோசகரின் ஊக்கம், என் மருத்துவ வழிமுறைகள் என மூன்று விஷயங்கள் தான் நான் எழவும் மீண்டும் வெற்றிக்கோட்டை தொடவும் உதவியது என்றும் உருக்கமாக கூறியிருக்கிறார் உஷா.
அந்த துடிப்பான மனத்திறனுடன் 1989ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். நான்கு தங்கம் இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்று முன்னிலை வகித்தார். 1991ல் சீனிவாசன் என்பவரை மணந்து கொண்டவர் மூன்றாண்டுகள் ஓய்வில் இருந்தார். கணவரின் ஊக்கத்தால் மீண்டும் தடகள போட்டிகளில் ஓட தொடங்கினார். அதிலும் தோல்விகளை கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்காக ஒரு பதக்கமும் வெற்றியும் இப்படி பறிபோய்விட்டது என ஒருபோதும் நினைத்ததே இல்லை.
இந்தியாவுக்காக பதக்கமும் வெற்றியும் போய்விட்டதே என்று தான் ஆதங்கம் கொண்டேன். பின்னர் தோல்விக்கான காரணம் மற்றும் என் தவறுகளை உணர்ந்து தோல்விகளை விட அதிகமான வெற்றிகளையும் பெற்றிருக்கிறேன். தற்போது கேரள மாநிலத்தில் இந்திய ரயில்வேத் துறையில் பணியாற்றுகிறார். அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது குறித்த இந்திய அரசின் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.