பிரசவத்திற்காக சென்ற பெண்ணிற்கு ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள குருமலை மலை கிராமத்தில் ராமு என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பவுனுக்கு 2 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் 3-வது முறையாக பிரசவ வலி ஏற்பட்டது. இந்த மலை கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாததாலும் கிராம மக்கள் பவுனை டோலி கட்டி தூக்கி வந்தனர். இதனையடுத்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பவுனை மலையடிவாரத்திலிருந்து ஆட்டோவில் அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆட்டோவில் பவுனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இருவரையும் சிகிச்சைக்காக ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்அனுமதித்தனர். அங்கு தாய் குழந்தை இருவரும் நலமுடன் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கிராமத்தில் போதுமான அளவு போக்குவரத்து வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டோலி கட்டி நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. ஆகவே இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.