தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் அக்கறையின்றி செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் திடீரென மதுபான கடைகளை திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதால் சமூக தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என குற்றம் சாட்டியுள்ளது. எனவே, மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டிக்கும் வகையிலும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மக்கள் அனைவரும் நாளை கருப்பு சின்னம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன்பு 5 பேருக்கு அதிகமாகாமல் நின்று அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்புமாறும் திமுக கூட்டணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.