மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் இறந்தவரின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓ.காரப்பள்ளி செந்தில் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிலர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இந்த மதுபானங்களை வாங்கி குடித்த பாபு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சந்துரு என்பவரும் மது குடித்ததால் இறந்துவிட்டார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சந்துருவின் உடலை ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மது விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.