சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதித்ததால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி கடைகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு சில்லறை காய்கறி கடை வியாபாரிகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேர் எதிரே இருக்கும் அரசின் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஏற்கனவே கொரோனா காலத்தில் காய்கறி கடைகள் கோயம்பேடு வணிக வளாகத்தில் மூடப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 120 நாட்களுக்கும் மேலாக வியாபாரத்தை செய்த பிறகுதான் ஓரளவு நல்ல நிலைக்கு தற்போது வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் மீண்டும் சில்லறை வியாபார கடைகளை அரசு மூடக் கோரி உத்தரவிட்டிருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.