Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உங்க சண்டைய விடுங்க… முதல்ல வேலைய பாருங்க… அதை பிடிக்க போறிங்களா இல்லையா…? தொடரும் போராட்டம்…!!

ஒற்றைக்கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் வனத்துறையினருக்கும், டாக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒற்றைக் கொம்பன் யானை  மூன்று பேரை அடித்துக் கொன்றுவிட்டு கேரளா பகுதிக்கு தப்பி ஓடியது. இதனை அடுத்து தமிழக-கேரள வனத் துறையினர் அதனை கண்காணித்து வந்துள்ளனர். அதன்பின் ஒற்றைக்கொம்பன் யானையானது மறுபடியும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடிக்கு வந்து விட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அந்த யானையை விரைந்து பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அந்த ஒற்றை கொம்பன் யானையை பிடிப்பதற்காக கூடலூர் வட்டத்தைச் சேர்ந்த வனத்துறையினர், கோவையை சேர்ந்த சிறப்புக் குழுவினர் மற்றும் 3 டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த ஒற்றை கொம்பன் யானையானது குடியிருப்பை ஒட்டி நிற்பதை வனத் துறையினர் கண்டுபிடித்து, அதற்கு மயக்க ஊசி செலுத்த மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் மயக்க ஊசி செலுத்துவதற்கு சற்று தாமதம் ஆனதால் வனத்துறையினரும், டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெகு நேரமாக யானை ஒரே இடத்தில் நின்றிருந்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்காமல் அவர்களுக்குள் சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சேரம்பாடி சுங்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறும்போது, ஒற்றைக்கொம்பன் யானையானது 3 பேரை அடித்துக் கொன்று விட்டதால் இதற்குப் பிறகும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆனால் அவர்கள் யானை இருக்கும் இடத்தை கண்டு பிடித்த பிறகும் மயக்க ஊசி செலுத்தாமல் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் யானையால் மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவர்களுக்கு இடையேயான சண்டையை மறந்து விட்டு அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபடவில்லை என்றால் இந்தப் போராட்டமானது தொடரப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |