அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சி முதுமலை புலிகள் காப்பக கரையோரம் அமைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த விநாயகன் என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து காப்பகத்தில் விட்டுள்ளனர். இந்த யானை தற்போது ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இதனால் அவதிப்படும் கிராம மக்கள் விநாயகன் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி முதுமலை வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அகழி வெட்டும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சேதமான வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.