உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தும்பு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நம்பிபத்து கிராமம் வழியாக இந்த ஆலைக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மின்வாரிய அதிகாரிகள் கிராமம் வழியாக உயர் மின்னழுத்தம் கொண்டு செல்லப்படாது என உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் அந்த கிராமம் வழியாக உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால், கோபம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள கோவிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்கள் கிராமத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த உயர் மின்னழுத்தம் பாதை அமைக்கும் பணியை கைவிட வில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.