எம்.ஜி.ஆர் சிலை தீப்பிடித்து எரிந்ததால் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை தேர்தலின் காரணமாக துணியால் மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஒன்றிய தி.மு.க சார்பில் அப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எம்.ஜி.ஆர் சிலை மூடப்பட்டிருந்த துணி மீது தீப்பொறி பறந்து விழுந்ததால், மளமளவென தீ சிலை முழுவதும் பரவிவிட்டது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி சிலை மீது எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் சிலை மீது இருந்த பெயிண்டுகள் தீப்பிடித்து எரிந்ததால் சிலை முழுவதும் கருப்பாக மாறி விட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க-வினர் எம்.ஜி.ஆர் சிலை அருகே திரண்டு தீ பிடிப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.