சுடுகாட்டில் வைத்து குப்பைகள் எரிப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சங்கராபரணி ஆற்றின் அருகில் இருக்கும் சுடுகாட்டில் எரிக்கின்றனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு வழக்கறிஞர் சக்தி ராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் பாஸ்கர், கலியமூர்த்தி, ஸ்ரீனிவாசன் போன்றோர் சுடுகாட்டில் வைத்து குப்பைகளை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சுடுகாட்டில் இனிமேல் குப்பைகளை எரிக்க மாட்டார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் பேரூராட்சி அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.