கல்குவாரி விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சோனா அன்சாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அங்கு ஏற்பட்ட பாறைச் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது 6 மணிக்கு தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டதால் காலை 10 மணிக்கு மீட்பு பணியானது துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலவாக்கம் காவல் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர்களான ஆறுமுகசாமி, தேவராஜன், சேகர், சரவணன் போன்றோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து திருமுக்கூடல்-மருதூர் சாலையில் இந்த விபத்தில் உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள் இழப்பீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.