சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மதுபான கடை சார்பில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெண்டருக்காக விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று கேட்டு நிர்பந்திக்கவில்லை. ஆனால் டெண்டரை இறுதி செய்த பிறகு நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அதோடு அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று வழக்கு விசாரணையின் முழுமையான உத்தரவு நகல் வெளியாகியுள்ளது. அதில் கடந்த 1937-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மதுபான கடைகள் மூலமாக அரசுக்கு வருவாய் வருவதால் பூரண மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. தமிழக அரசும் மதுபான கடைகளை தொடங்கிய பிறகு, இதுவரை 5358 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கடைகளின் மூலம் விற்பனைகளை ஒழுங்குபடுத்த மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் மதுபான கடைகள் தொடர்பான டெண்டர் விடும் போது இது போன்ற பிரச்சனைகள் வருவதால், டெண்டர் நடைமுறையில் ஏதோ சிக்கல் இருப்பதாக நீதிபதி கூறினார். அதன் பிறகு டெண்டர் விண்ணப்பிக்கும் போதே நில உரிமையாளரிடம் தடையில்லா குத்தகை சான்று பெற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
டெண்டர் திறந்த பிறகு 7 நாட்களில் வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பு தவறானது என்பதால், டெண்டரை ரத்து செய்த நீதிபதி, டெண்டர் திறக்கும் நேரத்தில் மதுபான கடைகளின் வெளிப்படை தன்மையை அறியும் விதத்தில் சிசிடிவி கேமராக்களை ஒவ்வொரு கடையிலும் பொருத்த வேண்டும் என்றார். மேலும் தற்போது உள்ள டெண்டர் ரத்து செய்யப்பட்டதால், நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற்று விட்டு புதிய டெண்டரை வெளியிடலாம் என்று கூறியுள்ளார்.