பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானில் உள்ள தலீபான்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகளை வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்கா படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து நாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் சிலரை உலக நாடுகள் தங்கள் நாட்டிற்கே மீட்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பிரித்தானியா மக்களை அங்கிருந்து வெளியேற்ற பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கால அவகாசம் கேட்டுள்ளார்.
அதாவது ” ஆப்கானில் மற்ற நாட்டு படைகள் தங்கி இருந்தாலும் அனைத்தும் அமெரிக்கா படைகளையே சார்ந்து இருக்க வேண்டியதாகவுள்ளது. ஏனென்றால் தலீபான்கள் அமெரிக்கா படைகள் வெளியேற தொடங்கிய பிறகு தான் ஆப்கானை வேகமாக கைப்பற்றத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் மற்ற நாட்டுப் படைகளை பெரிதாக கண்டு கொள்வதில்லை. இதனால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை தொடர்பு கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா படைகள் வெளியேறுவதை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதிபர் ஜோ பைடன் அவரது கோரிக்கையை நிராகரித்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்றே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேருவார்கள்” என்று கூறிவிட்டார்.
ஆகவே வேறு வழியின்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் தலீபான்களிடமே தனது கோரிக்கையை வைத்துள்ளார். அதில் “ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்கா படைகள் வெளியேறியதை அடுத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து பொது மக்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த கோரிக்கையானது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு பிறகு கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் அதன் பின் யாரையும் ஆப்கானில் இருந்து வெளியேற்ற முடியாது என்றும் தலீபான்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். இல்லையெனில் வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.