முதன்மைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி பகுதியில் பல்லடம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரேஷன் கடையில் தமிழக அரசின் உணவுப் பொருட்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் கடையின் விற்பனையாளரான ஷீலாவிடம் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்து அவர் கேட்டு விசாரித்தார். மேலும் அவர் அரிசியின் தரத்தையும் சோதனை செய்துள்ளார்.
அதன்பின் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் கடையினுடைய செயல்பாடு குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விசாரித்துள்ளார். அப்போது அங்குள்ள பொதுமக்கள் புதுப்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து பொருட்களை வாங்க சிரமமாக இருக்கிறது எனவும் தங்களுக்கென தனியாக பகுதி நேர ரேஷன் கடை ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திடீர் ஆய்வினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.