மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். அதற்கான வேட்பு மனு தாக்கலை நாளை செய்கின்றார். இதனால் இன்று வாராணசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகின்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் பிரதமர் மோடி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றார்.
இதையடுத்து சாலை மார்க்கமாக தொடங்கும் இந்த பேரணியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் , நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். வாராணசியில் உள்ள தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை இந்த பேரணி நடைபெறுகின்றது.இதையடுத்து பிரதமர் மோடி கங்கை நதியில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துகிறார். இந்த பேரணியை முடித்து விட்டு பிரதமர் மோடி நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றார்.