தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழக அரசு தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும். ஆனால் போராட்டக்காரர்களுடன் வன்முறை யாளர்களும் கலந்து விட்டார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை கையாளுவது மிகவும் கடினமான ஒன்றாகும். இவர்களை அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு கையாண்ட போதிலும் துப்பாக்கி சூடு வரை சென்றிருக்க வேண்டுமா என்பதுதான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது.
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி அது அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்தான் நடக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்தான் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது அப்போது ஆட்சியில் இருந்தவர்களை தண்டிக்காமல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது எவ்விதத்தில் நியாயம். எய்தவர்களை விட்டுவிட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது போன்று இருக்கிறது.
எனவே துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மற்றொரு முறை பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உத்தரவு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துக் கொள்வதாக கூறினார்.