நாட்டின் தேவைகள், வருங்கால எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, வரி குறைப்பின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு மத்திய பட்ஜெட் வழிவகுத்துள்ளது. வேளாண்மை, உள்கட்டமைப்பு, ஜவுளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் வேலைவாய்ப்புக்கானது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 4 துறைகளுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக 100 விமான நிலையங்களை மேம்படுத்துவது முக்கியமானது. சுற்றுலா துறையில் குறைந்த முதலீட்டில் வேலைவாய்ப்பு, வருமானத்தை ஈட்டுவதற்க்கான வாய்ப்பு அதிகம். தொழில்முனைவோருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மையம் அமைக்கப்படுகிறது. உள்கட்டமைப்புக்காக அதிக நிதி ஒதுக்கி இருப்பதால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில்தொழில் தொடங்குபவர்களுக்கான வரிச்சலுகை கிடைத்திருக்கிறது. நாட்டின் தேவைகள், வருங்கால எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். தொலைநோக்கு செயல்பாடு கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
.