அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி மேலிடம் தான் தலையிட்டு பிரச்சனைகளை சரி செய்து வைத்தது. ஆனால் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றிய தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லி மேலிடம் அனைவரும் இணைந்து அதிமுகவில் செயல்படுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக 2 முறை டெல்லி பயணம் மேற்கொண்டும் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதில் சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மட்டும் சந்தித்த நிலையில் சந்திப்பு முடிந்த பிறகு மிகவும் கவலையான முகத்துடன் வெளியே வந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் நரேந்திர மோடி எதற்காக சந்திக்கவில்லை என்ற காரணத்தை தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். அதிமுக கட்சியில் ஓபிஎஸ் சார்பாக புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஊழல் அரசியல்வாதி. தொடர்ந்து பல்வேறு விதமான ஊழல் வழக்குகளை சந்தித்து வருகிறார். இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி எடப்பாடியை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி தற்போது 4500 கோடி ரூபாய் ஊழல் வழக்கு, கொடநாடு கொலை வழக்கு என பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். இதனால் தேர்தல் நிற்க முடியாத சூழ்நிலை எடப்பாடிக்கு வரும். மேலும் அதிமுக கட்சியில் இருப்பவர்களை நீங்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீர்கள் என்று கூறினார்.