பிரேசில் அதிபர் குடல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பிரேசில் நாட்டில் சற்று அதிகமாகவே பாதிப்பு இருந்துள்ளது. இந்த கொரோனா நோய் பரவலை சரியாக கையாளவில்லை என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ மீது பெரும் புகார்கள் எழுந்துள்ளதால் அவருக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த மாதத்தில் தடுப்பூசி கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினர் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மாதம் கொரோனா பாதிப்பினால் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். இதனை அடுத்து பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோவும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார்.
மேலும் அவருக்கு குடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக சாவ் பாவ்லோ நகரில் உள்ள நோவோஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவர்கள் அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளனர். இதில் முக்கிய குறிப்பாக 2018 இல் நடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயிர் போல்சொனராவுக்கு கத்திகுத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதிகப்படியான ரத்தப்போக்கு உண்டாகி பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையில் இருந்து அவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.