நடிகை சினேகா அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில் தாங்கள் வட்டிக்கு விடவில்லை எனவும், அந்த நிறுவனத்தில் முதலீடு மட்டுமே செய்ததாகவும் சினேகாவின் கணவரும், நடிகருமான பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தங்களிடம் 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தருவோம் என கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி பணம் தரவில்லை எனவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்த செய்தி வெளியானதும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் அம்போவென போகும் என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு வட்டிக்கு பணம் தரவில்லை எனவும், பங்குதாரராக முதலீடு மட்டுமே செய்ததாகவும் சினேகாவின் கணவர் பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார்.
ஆறு மாதங்கள் கழித்து முதலீட்டைத் தொடரலாமா அல்லது திரும்பப் பெறுவதா என கூறி இருந்த நிலையில் முதலில் திரும்ப கேட்ட போது அந்த நிறுவனம் இழுத்தடித்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பிரசன்னா கூறியிருக்கிறார்.