குடும்ப வறுமை காரணமாக தாய் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சார்ந்தவர் மதிவாணன்-புவனா தம்பதியினர். இவர்களுக்கு அட்சயா, ஹேமாஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பணம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் வறுமை நிலவி வந்துள்ளது. அதனால் புவனா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளார்.
அதன்பின் இன்று காலை புவனா விஷம் குடித்துவிட்டு தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். இதில் தாயும் இரண்டு மகள்களும் வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்து வீட்டில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் புவனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து அட்சயா, ஹேமாஸ்ரீ இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.