இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது.
இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உண்டு. இதுமட்டுமின்றி மசூதிகளில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையும் நடத்துவார்கள். தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் தொழுகையை வீட்டிலிருந்தபடியே நடத்த வலியுறுத்தப்பட்டது.
மசூதியில் நமாஸ் நடத்துவதற்கு பதிலாக வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என பல்வேறு இஸ்லாமிய தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ரமலான் நோன்பு இருக்கு அனைத்து மக்களும் வீடுகளிலேயே நமாஸ் செய்து வருகின்றனர். மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.