பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்காக பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நடப்பு கவியாண்டிற்கான பருவ தேர்வுகளை அடுத்த மாதம் இணைய வழியில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பின்வருமாறு கூறியுள்ளார்.
” நடப்பு கல்வியாண்டிற்கான செய்முறை தேர்வுகள் டிசம்பர் இறுதியில் நடத்தப்படும். இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆன்லைனில் நடத்தப்படும். ஆன்லைனில் நடைபெறும் தேர்வுகளை முறையான கண்காணிப்பாளர்கள் கொண்டு கண்காணிப்பதை அனைத்து கல்லூரி முதல்வர்களும் உறுதி செய்ய வேண்டும். தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் தேர்வில் கலந்து கொள்கிறார்களா என்பதை அரசு புகைப்பட அடையாள அட்டை அல்லது கல்லூரி அடையாள அட்டையுடன் மாணவர்களின் புகைப்படத்தை வைத்து கண்காணிப்பாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இணையவழியில் நடைபெறும் தேர்வுகளில் 20 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். தேர்வு குறித்த கால அட்டவணை விரைவில் அண்ணாபல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்”.