ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரமானது கடும் சரிவை சந்தித்துள்ளது.
உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் நோய் உருவெடுத்தது. இந்த கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிர்களை பறித்ததோடு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இதனால் பொருளாதாரத்தினை சரிவிலிருந்து மீட்க உலக நாடுகளானது இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இதனையடுத்து கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வந்த சீனா தனது பொருளாதாரத்தையும் குறுகிய காலத்திலேயே மீட்டெடுத்தது. கொரோனா காலத்திற்கு பின் சீனாவின் பொருளாதாரமானது இந்த வருடத்தின் தொடக்கத்தினில் 2.3 சதவீதம் வளர்ச்சியடைந்தது. ஆனால் இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான வளர்ச்சியாக காணப்பட்டது. அதே வேளையில் கொரோனா தொற்றுக்கு பின் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற ஒரே நாடாக சீனா இருந்தது.
ஆனால் ரியல் எஸ்டேட் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் நிலக்கரி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரமானது கடும் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது. அதன்பின் அந்நாட்டின் மொத்த உள்நாட்டின் உற்பத்தி 3-ம் காலாண்டில் வெறும் 4.9 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது. இது 2-ம் காலாண்டில் 7.9 சதவீதமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் முதலாம் காலாண்டில் 18.3 சதவீதமாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே 3-ம் காலாண்டின் மொத்த உள்நாட்டின் உற்பத்தி முந்தைய காலாண்டை விட 5 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 3-ம் காலாண்டின் தரவை வெளியிட்ட தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பூ லிங்ஹுய் இதுகுறித்து கூறியுள்ளார்.
அதாவது “சர்வதேச சூழலில் தற்போதைய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருதல் மற்றும் உள்நாட்டு பொருளாதார மீட்பு இன்னும் நிலையற்றதாகவும் சீரற்றதாகவும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் 4-வது காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அதிகமான அழுத்தத்தை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சீன பொருளாதாரத்தின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்கானது முதன்மையானதாக கருதப்படுகிறது. ஆகவே அந்நாட்டின் மொத்த உள்நாட்டின் உற்பத்தியில் 29 சதவீதம் அளவில் ரியல் எஸ்டேட் துறை பங்கு வகிக்கிறது. கடந்த வாரம் சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான எவர்கிராண்ட் திவாலானதாக அறிவித்தது. இது சீனாவின் பொருளாதாரத்தில் சிக்கலை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.