அரசியலில் பெண்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்காலமாக தங்கியிருந்த அமெரிக்கா படைகள் வெளியேறிதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். அதனால் ஆப்கானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் இருபது ஆண்டுகால போரானது முடிவுக்கு வந்ததாகவும் இனி ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையும் என்றும் தலீபான்கள் கூறியிருந்தனர். இதற்கிடையில் ஆப்கானில் அரசியலில் பெண்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆப்கான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காபூலில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி செல்லாமல் இருப்பதற்காக தலீபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சமூக ஆர்வலரான நர்கீஸ் என்பவரை தலீபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் தலீபான்கள் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்” என்று வெளியிடப்பட்டுள்ளது.