கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏழை நாடுகள் பல கடனால் மூழ்கும் ஆபத்து இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா தொற்றினால் ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர் ஆமினா முஹம்மத் இது குறித்து தெரிவித்த பொழுது, “சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று இன்று வரை உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது.
வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு உலக அளவில் பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கின்றது. அதிலும் ஏழை நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளும் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு எப்படி உதவ முடியும் என்பது தெரியவில்லை. கொரோனா தொற்றின் காரணமாக ஏழை நாடுகள் கடனில் மூழ்கக் கூடிய அபாயம் இருந்து வருகிறது.
இந்த பிரச்சனையை தவிர்க்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நீடித்த திட்டமொன்று அவசியம். காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதிலும், ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதிலும், வறுமையை அழிப்பதிலும் உலகம் பின்தங்கியே உள்ளது. இதனுடன் இப்போது கொரோனா சேர்ந்துள்ளது இதனில் இருந்து உலகத்தை மீட்டு ஏழை நாடுகள் மற்றும் பூமியை காப்பாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம்” எனக் கூறினார்