பழனி முருகன் கோவிலுக்கு நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆவின் நெய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று பழனி மலை முருகன் கோவிலுக்கு வந்தார்.அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார்.கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் பூஜையில் கலந்து கொண்ட அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
பின்பு அவர் நிருபர்களிடம் பேசியதாவது, தமிழக அரசு வரும் பொங்கலுக்கு வழங்கவிருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் 100 மி.லி ஆவின் நெய்யும் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவில் சிலையை செய்த சித்தர் போகரை மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறக்காமல் வழிபட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் போல வெளிப்படைத்தன்மை உடைய நல்ல மனிதர் யாரும் இல்லை.
ஆனால் தற்போது அவர் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று முடிவு செய்துள்ளார். ஆன்மீகத்தை விமர்சனம் செய்து, கேலி,கிண்டல் செய்யும் திமுகவுக்கு ரஜினி ரசிகர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக, அதிமுகவை குற்றம்சாட்டி கவர்னரிடம் மனு கொடுத்துள்ளது. அதற்கு பதிலடியாக மக்கள் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பார்கள்.இனி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவே வராது என்று கூறினார்.