தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்ராபாணி பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கணக்கு படித்தும் கணக்கு தெரியாத ஒருவரும், சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்து கைதான ஒருவரும் பொங்கல் பரிசு தொகுப்பை குறித்து பேசியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது பருப்பு மற்றும் பாமாயில் விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் 32 ரூபாய்க்கு வாங்கிய பையை 62 ரூபாய்க்கு வாங்கியதாக கூறியவர்.
எதுவுமே புரியாமல் அவதூறு பேச வேண்டும் என்பதற்காகவே தவறான தகவல்களை பரப்புகிறாரா என்று தெரியவில்லை. இருப்பினும் விவரம் புரியாமல் பேசும் சிலருக்காக நான் இந்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளேன். பொங்கள் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகி விட்டது என்றும் சில பகுதிகளில் மிளகுக்கு பதில் வேறு ஏதோ பொருள் இருந்ததாகவும் சிறு சிறு புகார்கள் வந்தது. இருப்பினும் அந்த சிறிய புகாரை சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் வைத்திருப்பவர்கள் ஊதி ஊதி பெரிதாக்கி விட்டார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொந்த கட்சிக்காரரே தவறு செய்தாலும் கூட நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்ட மாட்டார்.
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து நியாய விலை கடைகளில் நேரடியாக சென்று முதல்வர் ஆய்வு செய்தார். அதோடு பொங்கல் பரிசு தொகுப்பை சரிபார்க்காமல் விநியோகித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மேலாளர், தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் கிடங்கு பொறுப்பாளர் ஆகியோர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதோடு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக 5 நிறுவனங்களுக்கு 7.04 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை அல்லாத அளவுக்கு மிகப்பெரிய தண்டனை என்று விநியோகிப்பவர்களே கூறினார்கள்.
அதன் பிறகு அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற ஒப்பந்தங்களில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று எந்த ஒரு விதியும் இல்லை. மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நபர் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது என்று சொல்வது போல் இருக்கிறது. சிலர் பேனை பெருமாள் ஆக்குகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000, இலவச பேருந்து போன்ற பல்வேறு விதமான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.