சென்னையை அடுத்த புழல் அருகே போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புழல் பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். வடக்கை பிரச்சினை தொடர்பாக உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் பென்ஷாம் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாகவும் அப்போது சீனிவாசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்ததோடு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புழல் காவல் ஆய்வாளர் பென்ஷாமை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தீக்குளித்த சீனிவாசன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.