திருமணமான 20 நாட்களிலேயே போலீஸ்காரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள மணக்காடு பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்து திருச்சி லால்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இவரது மோட்டார் சைக்கிளானது சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோ மீது மோதி விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்து படுகாயமடைந்த ரஞ்சித்குமாரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் விரைந்து சென்று ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.