மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரரின் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுடர்விழி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கொளத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினரான ஜெகநாதன் என்பவருடன் சுடர் விழி மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த குப்பை லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சுடர்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடர்விழியன் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.