சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சூப்பிரண்டு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இணைந்து கல்வராயன் மலை அருகில் உள்ள குரும்பலூர் கிராமத்தில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 400 கிலோ வெல்லம் முட்டை மற்றும் 500 கிலோ சர்க்கரை மூட்டைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து தும்பராம்பட்டு ஆற்றுப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 2700 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். அதன்பின் சட்டவிரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேக்கு மரத்து வளவு கிராமம் ஓடைகளில் சோதனை செய்த போது 1200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். இதுதொடர்பாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் ஒரே நாளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு 500 கிலோ சர்க்கரைகளையும், 400 கிலோ வெள்ளங்களையும் மற்றும் 3900 லிட்டர் சாராய ஊறல்களையும் கைப்பற்றியுள்ளனர். இதைப்பற்றி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறும்போது, கல்வராயன்மலை மட்டுமில்லாமல் இம்மாவட்டத்தில் முழுவதுமாக காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் தொடர்ந்து சாராயம் விற்பனை மற்றும் அதை காய்ச்சும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.