மயில்களை வேட்டையாடிய வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகில் வாழ்வார்மங்கலத்தில் குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்து பகுதியில் நேற்று முன்தினம் மாலை பொழுதில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதையடுத்து, அதிர்ச்சியடைந்த வாழ்வார்மங்கலம் பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த பகுதியில் 3 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டு மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். அதில், 2 பேர் பொதுமக்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினர். ஒருவரை மட்டும் பொதுமக்கள் விரட்டி மடக்கிப்பிடித்து, சிந்தாமணிப்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கடவூர் சுக்காம்பட்டியை சேர்ந்த 25 வயதுடைய பெருமாள் என்பதும், நாட்டு துப்பாக்கியால் மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடிய இருவரும் அதே ஊரை சேர்ந்த பழனிசாமி மற்றும் கோபால் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாளிடமிருந்த நாட்டு துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட 4 மயில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கடவூர் வனத்துறையினரை வரவழைத்த காவல்துறையினர், பெருமாளை அவர்களிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் பெருமாளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயில்களை மூவர் சேர்ந்து வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.