பல்லடம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது கணவரை பிரிந்து தாய் – தந்தையுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த சமயம் பார்த்து அதே பகுதியைச்சேர்ந்த 26 வயதுள்ள செல்வராஜ் (எ)பிரபா என்ற இளைஞர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்..
பின்னர் உன்னை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்ததாகவும், தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் இதனை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி நேற்று முன்தினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த செல்வராஜ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.