விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி அவர்களிடம் பண மோசடி செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண வலைத்தளங்களில் விவாகரத்துப் பெற்ற பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம் ஆசையாக பேசிப் பழகி தான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் எனக்கூறி நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன்படி சமீபத்தில் சுரேஷ், திருமண வலைத்தளம் மூலமாக பைதரஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவரை சந்தித்து, பேசி பழகி தான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி நம்பவைத்துள்ளார். இதையடுத்து அவர் அப்பெண்ணிடம் திருமணத்திற்கு முன்பாக நாம் வீடு கட்ட வேண்டும் எனக்கூறி ரூ.10 லட்சம் மற்றும் 80 கிராம் தங்க நகைகளை பெற்றுள்ளார். அவற்றைப் பெற்றுக்கொண்ட பின் அவர் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவானார்.
இதனால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் பைதரஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுரேஷ் இதுவரை 4 பெண்களை கல்யாணம் செய்து, 23-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.