குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொலைசெய்த கொடூர தந்தையை போலீசார் கைதுசெய்தனர்.
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதியர் பாரதிமோகன் (27) மற்றும் வேம்பு (23).. இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.. இவர்களுக்கு பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல் நேற்று (ஜூன் 24) காலை இருவருக்குமிடையே வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதிமோகன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி ஓங்கி தரையில் அடித்துள்ளார்.
இதனால் குழந்தை படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் குழந்தையை உடனடியாக மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.. ஆனால் சிகிச்சைப் பலனின்றி குழந்தை இன்று பரிதாபமாக இறந்தது. இச்சம்பவம் குறித்து வைப்பூர் காவல் துறையினர் பாரதிமோகனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.