கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூராம்பட்டியில் தண்ணீர் பந்தல் முனியப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 29ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வாலிபர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், ஒருவர் பன்னீர் குத்தி பாளையம் பகுதியில் வசித்து வரும் பாபு என்பவரும், மற்றொருவர் வரப்பாளையம் பகுதியில் வசித்து வரும் வினோத்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும் உண்டியலை உடைத்து ரூபாய் 2500 திருடியதாக அவ்விருவரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் ராசிபுரம் சிறையில் இருவரையும் அடைத்தனர்.