தனியாக இருந்த பெண்ணிடம் நகைக்கு பாலீஷ் செய்து தருவதாகக் கூறி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூந்தலூர் கிராமத்தில் ஜெயக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் நகைகளுக்கு பாலீஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதனை அடுத்து அதை உண்மை என நம்பி ஜெயக்கொடி அவர்களை உள்ளே அழைத்துள்ளார். அப்போது இருவரில் ஒருவர் மட்டுமே வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் மற்றொருவர் தனது வாகனத்தில் வெளியே நின்று கொண்டிருந்திருக்கிறார். அதன்பின் வீட்டிற்குள் வந்த மர்ம நபரிடம் ஜெயக்கொடி தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார்.
அதை வாங்கி செம்புகள் போட்ட மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயக்கொடி திருடன் என கத்திக் கூச்சலிட்டுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து பறிபோன தங்கச்சங்கிலி மதிப்பானது 1,75,000 என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவின் பதிவை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர் ஒருவர் தப்பி ஓடிய காட்சி பதிவாகியுள்ளது. மேலும் ஜெயக்கொடி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.