திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பெரியசாமி.. 28 வயதான இவர் தப்பாட்ட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பைக்கில் அன்னிமங்கலத்திலிருந்து திருமானூர் நோக்கி சென்றார்.
அப்போது திருமானூர் அருகே சென்றபோது, எதிர் திசையில் அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கிருபாகரன்(வயது 27), தங்கவேல்(வயது 50) ஆகிய இருவரும் ஒரு பைக்கில் வந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 2 பைக்கும் நேருக்கு நேர் வேகமாக மோதிக்கொண்டன.
இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த கிருபாகரன் மற்றும் தங்கவேலை அருகிலிருந்தவர்கள் உடனே மீட்டு சிகிச்சையளிப்பதற்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.. இதுகுறித்து திருமானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.