திருமங்கலத்தில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோடு பகுதியில் தபால் அலுவலகமும், அரசு மருத்துவமனையும் உள்ளது. இன்று காலை அப்பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியவாறு கீழே விழுந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்து பார்த்தபோது வாலிபர் பலியானது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து உடனடியாக திருமங்கலம் நகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து திருமங்கலம் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்துபோன வாலிபர் புளூ கலர் டீ-சர்ட், டிராக் சூட் மற்றும் கண்ணாடி அணிந்திருந்தார். வாலிபரின் உடல் அருகில் கிடந்த பையில் ரூ. 3,500 ரொக்கபணம், புதிய மொபைல் போன், கைலி, பனியன் மற்றும் ஜட்டிகள் இருந்தது.
மேலும் பருத்திச் செடிக்கு அடிக்கும் மருந்து பாட்டில் ஓன்றும் சடலத்தின் அருகில் கிடந்தது. எனவே அந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். பின்னர் வாலிபரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மேகநாதன் என்பவரது மகன் முருகன் என்பதும், என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய முருகன் திருமங்கலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..