போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஜோசப் ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள கொட்டையூர் கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு தனது மனைவி மனோகரி பெயரில் 75 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து ஜோசப் அந்த நிலத்தை சுத்தம் செய்வதற்காக தனது மகன் கரூன் அசோக் உடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இது எங்களுடைய நிலம் எனக் கூறி அதற்கான பத்திரத்தையும் காண்பித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோசப் மற்றும் அவரது மகன் கரூன் அசோக் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் விசாரணையில் கொட்டையூர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராமன், கோவிந்தசாமி, காளி, செல்வம், குட்டி நாசி ஆகியோர் போலி பத்திரம் தயார் செய்து ஜோசப்பின் நிலத்தை அபகரிக்க முயன்றது கவல்துறையினற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் 5 பேரையும் கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 2 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.