13 வயது மாணவி கூறிய பொய்யால் பிரான்சில் 2 உயிர்கள் பலியாகியுள்ளது.
பிரான்சில் உள்ள பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி ஒருவர் தனது தந்தையிடம் சென்று, தனது வரலாற்று ஆசிரியர் Samuel Paty என்பவர் முகமது நபியின் நிர்வாண புகைப்படங்களை மாணவர்களுக்கு காட்டப் போவதால் இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றார். நான் வகுப்பறையை விட்டு செல்லவில்லை அதனால் அவர் 2 நாட்கள் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார் என சிறுமி கூறியுள்ளார். இதை கேட்ட சிறுமியின் தந்தை Samuel Patyக்கு எதிராக facebook -ல் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இந்த சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குள் ஆசிரியர் Samuel Paty தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரை கொன்றது Abdhullakh Anzorov என்ற தீவிரவாதி தான். இதனால் Abdhullakh-ஐ காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த சம்பவத்தால் பிரான்சில் மிகப்பெரிய போராட்டமே வெடித்தது. மேலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக சட்டங்களும் உடனடியாக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வகுப்பறையில் மாணவி கூறியவாறு ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையில் அங்கு நடந்தது என்னவென்றால், வகுப்பில் dillemmas என்ற தலைப்பில் Samuel Paty பாடம் எடுத்துள்ளார். அப்போது சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கை முகமது நபி குறித்த கார்ட்டூன்களை வெளியிட்டதால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு 12 பேர் கொல்லப்பட்டுருக்கின்றனர். இதனால் அந்த பத்திரிக்கையை நாம் ஆதரிக்கலாமா? ஆதரிக்க கூடாதா? என்று தலைப்பை எடுத்துள்ளார். அந்த பத்திரிக்கை வெளியிட்ட முகமது நபியின் கார்ட்டூன்கள் இஸ்லாமிய மாணவர்களை அதிர்ச்சியடைய செய்யும் என்பதற்காக அவர்கள் கண்களை மூடிக் கொள்ளலாம் அல்லது அறையின் ஒரு ஓரத்தில் நின்று விடலாம் என்று Samuel Paty கூறியிருக்கிறார்.
வகுப்பறையில் உள்ள மாணவர்களை விசாரித்த போது இந்த உண்மை வெளி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த 13 வயது மாணவி வரலாற்று ஆசிரியர் Samuel Paty மீது பொய்யான குற்றச்சாட்டை கூறினேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இந்த செய்தியை Le Parisien என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையை உணர்ந்த அந்த மாணவியின் தந்தை நான் முட்டாள் தனமாக இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டேன். நான் ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவை தீவிரவாதிகள் பார்ப்பார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை.
நான் வெளியிட்ட வீடியோவால் ஒரு ஆசிரியரின் உயிர் பறிபோகும் என்று நினைத்தே பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் . ஒரு 13 வயது மாணவி கூறிய பொய் இரண்டு உயிர்களை பலிவாங்கியது. மேலும் உலக நாடுகளிடையே பிரான்சிற்கு மிகப்பெரிய அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.