பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை-நவ்வலடி சாலையில் தொடர்மழை காரணமாக ஓடையின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் நீண்ட தூரம் சுற்றி செல்கின்றனர். இதனை அறியாமல் சிலபேர் தரைமட்ட பாலத்தின் மீது வெள்ளத்தில் தத்தளித்த படி வாகனங்களில் செல்கின்றனர்.
எனவே அப்பகுதி மக்கள் தரைமட்ட பாலத்திற்கு அருகில் ராட்சத குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் எனவும், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தரைமட்ட பாலத்தில் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைபாலன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.