மது அருந்திய நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது அருந்திய ஒருவர் போதையில் தகராறு செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து உடன் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் செல்வராம், மணிகண்டன், பாபு, காளிமுத்து, சுந்தரம் ஆகிர்யோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் காயமடைந்த 5 பேரை மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி புதுப்பாளையம் மக்கள் காங்கேயம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த நல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் பொதுமக்களை தாக்கிய பெரம்பலூர் பகுதியில் வசிக்கும் பிரஷாந்த், பிரதீப், ராஜேஷ் மற்றும் ஹானஸ்ட் ராஜ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.