மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் தான் வெளியிட்டார். இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இதில் இதுவரை 1.60 லட்சம் கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 80,150 விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 2022 முதல் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்தில் பயனடைந்து வரும் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். அவ்வாறு இணைக்காத விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.