தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்று பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும் கொரோனா பரவாமல் தடுக்கவே மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் கோரோனோ வைரஸில் இருந்து நாள்தோறும் அதிகமானோர் குணமாகி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 960 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்மா சிகிச்சை என்பது ரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவமாகும். இந்த சிகிச்சை முறையில் முழுமையாக குணமடைந்த ஒரு கொரோனா நோயாளியிடமிருந்து ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு பிளாஸ்மா மாற்றப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. இதனால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடல் தயாராகிறது.
ஒரு டியூப் போல் இருவரின் நரம்புகளிலும் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர் உடலில் பிளாஸ்மா நீக்கப்பட்டு பின் இரத்த அணுக்கள் செலுத்தப்படுகிறது. இந்த பிளாஸ்மா தெரபியானது இந்தியாவிலும் செயல்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதித்துள்ளது. டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்திலும் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.