அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட புதிய முற்சியின் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 520 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டது. கடந்த 1 2/2 வருடங்களாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் சேர்ந்தனர். இந்நிலையில் மாணவர்கள் மன அழுத்தம் இன்றி கல்வி கற்க இந்த பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் திட்டமிட்டனர். அதாவது வகுப்பறைகளில் வழக்கமான கற்பித்தலை மாற்றி பாடங்களுக்கு ஏற்றவாறு வில்லுப்பாட்டு, நடனம், குரலிசை, ஆடல் பாடல் என கல்வி சூழலை ஆசிரியர்கள் மாற்றி அமைத்தனர்.
இவ்வாறு ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு கடந்த ஒரு மாத காலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் தொடக்கத்தில் 70 சதவீதமாக இருந்த மாணவர்களின் வருகைப்பதிவு தற்போது 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்படுவதாகவும், கற்றல் திறன் அதிகரிப்பதாகவும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதுபோன்று ஆடல்-பாடல் கற்பித்தலால் வகுப்பறை கல்வியை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன், ஆசிரியர் மாணவர்கள் இடையில் தோழமை உணர்வு அதிகரிக்கிறது என்று தலைமையாசிரியர் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசு நிதியை எதிர்பாராது ஆசிரியர்களே ஒன்று சேர்ந்து 2,50,000 ரூபாய் செலவில் பள்ளிக்கூட சுவர்களில் பல்வேறு அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அதாவது பொது சுகாதாரம், போக்குவரத்து விதிகள், நல்ல பழக்கங்கள், பொது அறிவு போன்றவற்றை போதிக்கும் காட்சிகளுடன், அறிவியல், கணிதம், சமூகவியல் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் ஓவியங்களும் சுவர்களில் வரையப்பட்டிருக்கிறது.