சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதிற்குள்பட்ட பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வருடத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது.இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.
அதில், சபரிமலைக்கு அனைத்து வயதிலான பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உரிமை சார்ந்தது. மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை விவகாரம் குறித்த மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு இந்த மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.