Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்க சொல்லுறத நம்ப முடில… இந்த இடத்தை விட்டு போகல… மாற்றுதிறனாளிகள் ஆவேச போராட்டம் …!!

கரடுமுரடான நிலத்தை சமன் செய்து தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் 82 மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல கவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடம் கரடுமுரடான பாறையாக இருப்பதால் அதனை சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் நல்ல கவுண்டம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்ட அதிகாரிகள் நிலத்தை சமன் செய்து தருவதாக உறுதி அளித்ததை அடுத்து, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் அதற்குப் பின் ஒருநாள் மட்டுமே அங்கு பணிகள் நடைபெற்று இருக்கிறது. அதன்பின் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை சமன் செய்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் பரிமளாதேவி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2.1 ஏக்கர் நிலம் முழுவதும் பாறைகளாக உள்ளதால் அதனை சமன் செய்ய ரூபாய் 15 லட்சம் வரை தேவைப்படும் என்பதால் அப்பணியை செய்து முடிக்க அவகாசம் தரும்படி தாசில்தார் கூறியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்காத மாற்றுத்திறனாளிகள் அப்பணி முடியும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளை மட்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து இரவு போர்வையை விரித்து அங்கேயே தூங்கி விட்டனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் போராட்டமானது இரண்டாவது நாளாக நடைபெற்று கொண்டிருப்பதால் அவர்கள் அந்த இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். எனவே  டவுன் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |