சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் நிலையத்தில் ஊழியரின் மொபைலை திருடிச்சென்ற வாலிபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி சேத்துபாதை பகுதியில் தனியார் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் நிலையத்தில் குப்புசாமி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குப்புசாமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் குப்புசாமியின் பாக்கெட்டிலிருந்த செல்போனை திருடியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை செய்த போது அவர் அனைமேடு பவளத்தானூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மற்றும் கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பண்ணப்பட்டி அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மற்றும் சைக்கிள் ஸ்டாண்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் செல்போனை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.